தமிழனின் வாழ்வை திருப்பிய “கஜா” புயல்
தமிழனின் வாழ்வை திருப்பிய “கஜா” புயல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியை முழுவதுமாக திருப்பிப் போட்ட “கஜா புயல்” தமிழ்நாட்டை மட்டும் அல்ல தமிழனின் வாழ்க்கையையும் திருப்பிப் போட்டது. “கஜா” என்று சொன்னாலே அனைவரும் அச்சப்படும் அளவிற்கு அந்த புயல் அமைந்தது. தமிழ்நாடு வானிலை மையம் அறிவித்த அறிக்கைப்படி நவம்பர் 15 அன்று இரவு சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவு (கிழக்கு தென்கிழக்குத் திசையில்) நாகப்பட்டினத்திலிருந்து 300 கி.மீ தொலைவு (கிழக்கு வடகிழக்குத் திசையில் புயல் நிலை கொண்டிருந்த பகுதியாக கணிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று காலை 9.00 மணிக்கு கடும் புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது. 3.00 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே காற்று வீசியது. மணிக்கு சுமார் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. கனமழையுடன் புயலும் சேர்ந்து நாகை தஞ்சை மேலும் சில மாவட்டங்கள் சேதம் அடைந்தன. இதைக் கண்டு தமிழகமே வருத்தம் தெரிவித்தது. என்னுடன் என் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியைகள் ஆசிரியர்கள் என அனைவரும் அவர்களுக்காக நிவாரணப் பொருட்களை சேர்த்தோம். அதை நியாயமான முறையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் நாங்களே நேரில் சென்றோம்.

” மழையே ! மழையே! குளங்களை நிரப்பு மக்களின் கண்களை குளமாக்காதே”
எங்கள் பள்ளி (காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மேல திருச்செந்தூர்) கஜா புயலுக்கு நிவாரணம் திரட்டும் பொழுது மாணவ மாணவிகளிடம் இருந்து பணமாக இல்லாமல் பொருளாக திரட்டினோம். நாங்கள் அவர்களிடம் கேட்டப் பொருட்கள் ரொட்டி, அரிசி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பால் பொடி, போர்வை பிஸ்கெட் முதலியவை ஆகும். ஆனால் மாணவ மாணவிகள் அதிகமாகவே நிவாரணம் அளித்தார்கள். எங்கள் பள்ளி முதல்வரும் (செல்வ வைஷ்ணவி) இந்தப் பணியில் மிக ஈடுபாட்டுடன் செயல்பட்டார். பொருட்களை போட்டு மக்களுக்குக் கொடுக்க ஒரு கடைக்காரர் பைகளை இலவசமாகத் தந்தார். பின்பு ஒவ்வொரு பையிலும் அரிசி பிஸ்கெட், பால்பொடி, துண்டு போர்வை மெழுகுவர்த்தி தீப்பெட்டி ஆகியவற்றை வைத்து பொட்டலமாகக் கட்டி வைத்திருந்தோம். ஒரு அட்டைப்பெட்டி முழுவதும் 25 பைகள் வைத்து 700 பொட்டலம் கட்டி தயாராக வைத்திருந்தோம். நவம்பர் 25 எங்கள் பள்ளியில் இருந்து அதிகாலை 2.30 மணி அளவில் நாகையை நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம். அந்த பயணத்தில் என்னுடன் சேர்த்து 5 மாணவிகளும் 6 சாரணர் மாணவர்களும் 7 ஆசிரியர்களும் 4 ஓட்டுநரும் 4 நடத்துனரும் சென்றோம்.

மேலும் என் பள்ளி முதல்வர் ஒருங்கிணைப்பாளர் இருவரும் நாகைக்கு சென்றோம். திருச்செந்தூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு 334 கி.மீ தூரம் வந்தது. நாங்கள் அங்கு நண்பகல் 1 மணிக்கு சென்றடைந்தோம். நான் என் பேருந்தில் இருந்து நாகையைப் பார்க்கும் போது என் இதயம் கனத்தது ஏனென்றால் கண்களுக்கு இடிந்து போன கட்டடங்கள், கூரைகள் இல்லாத வீடுகள், முறிந்து இருந்த மரங்கள், உடைந்த ஜன்னல்களைக் கொண்ட பள்ளிகளும் வீடுகளும், நெற்கதிர்கள் அழிந்த நிலங்கள் மட்டுமே தெரிந்தன.
நாங்கள் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆண்டாங்கரைக்குச் சென்றோம். அந்த கிராமத்தின் சாலைகளில் தான் மக்கள் அனைவரும் இருந்தனர். நாங்கள் எங்கள் பள்ளி வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது ஒருவர் வாகனத்தை தட்டி “ எங்க வீட்டுக்கு மேல மரம் விழுந்துட்டு எங்களால் உள்ளே போக முடியவில்லை, துணி ஏதாவது இருந்தா தந்துட்டு போங்க” என்று கூறினார். அப்போது ஒன்று உணர்ந்தேன். இந்த நிலைமை இந்த உலகில் யாருக்குமே வந்துவிடக் கூடாது. பின்பு அந்த கிராமத்தில் ஒரு பாலத்திற்கு அருகே எங்கள் பள்ளி வாகனத்தை நிறுத்தினோம். நிவாரணப் பொருட்களைக் கொடுக்கத் தொடங்கினோம். பொருட்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு முதியவர் அவர் காலில் தகரம் காற்றில் வந்து விழுந்து விட்டது என்று கூறினார்.
பின்பு எங்கள் பள்ளி மாணவர்கள் அவரது கால்களுக்கு முதலுதவி செய்து கொடுத்தார்கள். பசியாலும் வறுமையாலும் அவதிப்பட்ட பொதுமக்கள் பொறுமை இழந்து விட்டனர். அவர்கள் எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டார்கள். சில பைகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பைகளை சரசுவதி வித்யாமந்தீர் என்னும் பள்ளியில் கொடுத்தோம். அவர்கள் ஆங்காங்கு கூடாரம் போட்டு இருக்கும் மக்களுக்கு அந்த பொட்டலங்களைக் கொடுத்து விட்டார்கள். அந்த பள்ளியின் துணை முதல்வர் பெயர் கனிமொழி. அந்த பள்ளி முத்துப்பேட்டை என்னும் இடத்தில் இருந்தது. நாங்கள் அந்த பள்ளியில் இருந்து 4 மணி அளவில் கிளம்பி நாகையை விட்டு எங்கள் பள்ளியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். இரவு 11 மணி அளவில் பள்ளியை சென்று அடைந்தோம். நான் இறைவனிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான் “இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது”.
“ இயற்கையால் இயற்கைக்கு ஏற்பட்ட விபத்து இது”.
ல.சு. சுருதிகா
(11-ஆம் வகுப்பு)



